முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வந்தனர். இதனிடையே, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி, சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களது விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களே எழுவர் விடுதலையில் எதிர்ப்பு இல்லை என்று தெரிவித்து விட்டபோதிலும் கூட, அக்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், எழுவர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசு 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் சார்பாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.