சென்னை: “அதிமுக ஆட்சியில் இருந்தபோது 35 முதல் 40 செ.மீட்டர் வரை மழை பெய்தது. அந்தளவுக்கு இப்போது மழை இல்லை. அந்தளவுக்கு மழை பெய்திருந்தால், சென்னை மாநகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். காரணம் முறையாக வடிகால் பணிகளை மேற்கொள்ளவில்லை” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம், கொளப்பாக்கம், மதநந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.14) ஆய்வு செய்தார். கொளப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு நான் நேரில் சென்று பார்த்தேன். இந்த திமுக அரசு சென்னை மாநகரப் பகுதிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை என்ற செய்தியை அன்றாடம் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியிட்டுக் கொண்டுள்ளனர். எனவே ஊடகங்கள் எந்தளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது என்பதை மக்களுக்கு காண்பித்தால் நன்றாக இருக்கும்.
முதல்வர், ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒரு தவறான செய்தியை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். சென்னை மாநகரப் பகுதிகளில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டு வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக வெளியிடப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது.
திருவள்ளூர் நகர், மணப்பாக்கம் பகுதிகளில் சுமார் 500 வீடுகள், கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாத சூழல் இருந்து வருகிறது. அதேபோல விஎன்டி அவென்யூ, ராஜலெட்சுமி அவென்யூ, மதனந்தபுரம் பகுதிகளில் சுமார் 400 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களால் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். கொளப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் படகுகளில்தான் வந்தார்கள் என்று சில அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால் இந்தப் பகுதிகளில் மக்கள் படகுகள் மூலம்தான் சென்று வருகின்றனர். இந்தப் பகுதிகளை எல்லாம் அமைச்சர்களோ, முதல்வரோ வந்து பார்வையிடவில்லை. எனவே இந்தப் பகுதிகளில் ராட்சத மோட்டார்களை வைத்து தண்ணீரை இறைத்து வெளியேற்ற வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள்கூட அமைக்கவில்லை. ஆனால் அமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் அமைத்ததாக கூறியிருக்கிறார். அதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு முகாம் எதுவும் அமைக்கவில்லை. அத்தியாவசியப் பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை” என்றார்.
பின்னர் அவரிடம் முதல்வர் மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதாவது இப்போது மழை கொஞ்சமாகத்தான் பெய்துள்ளது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கி ஒரு பத்து பதினைந்து நாட்கள்தான் ஆகிறது. அதுவும் மிதமான மழைதான் பெய்துள்ளது, மிகப்பெரும் கனமழையெல்லாம் பெய்யவில்லை.
சாதாரணமாகவே 5 முதல் 6 செ.மீட்டர் மழை பெய்தாலே தானாகவே தண்ணீர் வடிந்துவிடும். இதைவைத்துக் கொண்டு நாங்கள் தண்ணீரை வடித்துவிட்டோம் என்று பேசி ஒரு மாயத்தோற்றத்தை அரசு ஏற்படுத்துகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது 35 முதல் 40 செ.மீட்டர் வரை மழை பெய்தது. அந்தளவுக்கு மழை இல்லை. அந்தளவுக்கு மழை பெய்திருந்தால், சென்னை மாநகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். காரணம் முறையாக வடிகால் பணிகளை மேற்கொள்ளவில்லை.
அதிமுக ஆட்சியில்தான் சுமார் 2400 கி.மீட்டர் வடிகால் அமைப்பதற்காக திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து ரூ.3500 கோடி பெறப்பட்டு சுமார் 850 கி.மீட்டர் வரை பணிகள் முடிக்கப்பட்டன. ஜெர்மன் நிதி நிறுவனத்திடம் ரூ.1300 கோடி பெற்று டெண்டர் கோரினோம். அந்த டெண்டரை திமுக அரசு ரத்து செய்துவிட்டது” என்று அவர் கூறினார்.