சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். அவர் இந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். பொன்ராஜின் உறவினரான அந்தோணிராஜ் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாள்களாகவே சொத்து பிரச்னை இருந்துவந்துள்ளது. உறவினர்களான இவர்கள் சமீபத்தில்தான் சொந்த ஊருக்குச் சென்று வந்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு பொன்ராஜ், சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்தோணிராஜும் சென்னை வந்துள்ளார். சென்னை வந்தவர், பொன்ராஜின் வீட்டுக்குச் சென்று சொத்து பிரச்னை விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ், தான் மறைந்துவைத்திருந்த கத்தியை எடுத்து பொன்ராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பொன்ராஜைக் கொலை செய்துவிட்டதாகத் தனது உறவினருக்குக் கால் செய்து நடந்த சம்பவ சொல்லிவிட்டு தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறார் அந்தோணிராஜ். இந்த தகவலறிந்த உறவினர்கள், இதுகுறித்து அபிராமபுரம் பகுதி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த போலீஸார், பொன்ராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த கொலையில் மேலும் இரண்டு பேருக்குத் தொடர்பு இருப்பது அந்த பகுதியில் கிடைத்த சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்தோணிராஜ் உள்ளிட்ட கொலையாளிகளை இரண்டு தனிப்படை போலீஸார் தேடிவருகிறார்கள். சொத்துக்காகச் சொந்தக்காரர் ஒருவரே வியாபாரியை வெடிப் படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.