புதுடெல்லி,
உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சீனாவின் குவாங்சோவ் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து உலகின் 5-ம் நிலை வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான இந்தியாவின் பி.வி.சிந்து விலகியுள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் காமன்வெல்த் விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற போது இடது கணுக்காலில் காயமடைந்த சிந்து அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
‘புதிய சீசனை தொடங்குவதற்கு முன்பாக காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் அவர் உலக டூர் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்ட சிந்து ஜனவரி மாதம் நடக்கும் போட்டிகளுக்கு முழு உடல்தகுதியுடன் இருப்பார்’ என்று அவரது தந்தை பி.வி.ரமணா நேற்று தெரிவித்தார்.