நாகர்கோவில் : சம்பள உயர்வு வழங்க மறுக்கும் ரப்பர் கழக நிர்வாக இயக்குனரை கண்டித்து நாகர்கோவிலில் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ரூ.40 சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அரசு ரப்பர் கழக நிர்வாக தொழிலாளர்களுக்கு அந்த 40 ரூபாய் சம்பள உயர்வை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ரப்பர் கழக நிர்வாக இயக்குனரை கண்டித்தும், உடனடியாக அரசு தலையிட்டு சம்பள உயர்வை வழங்க வலியுறுத்தியும் நாகர்கோவில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் மறியலில் ஈடுப்பட்டனர். முன்னதாக தொழிலாளர்கள் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு மழையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட 250-க்கும் மேற்பட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.