நடிகர் சங்க கட்டிடம் முடித்த பின்பே திருமணம் : உறுதியாய் நிற்கும் விஷால்
சென்னை தான் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவுக்கெல்லாம் தலைநகரமாய் இருந்தது. 80களுக்குப் பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது மொழி பேசும் மாநிலங்களுக்கு தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்கள் மாறின. எம்ஜிஆர் முன்னணி நடிகராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம், இப்போதும் அதே பெயரில்தான் இயங்கி வருகிறது. மற்ற மொழி நடிகர் சங்கங்கள் அவர்களது மொழி சினிமாவுக்காக தனித் தனியே இயங்கினாலும், தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.
பல சர்ச்சைகளுக்கு இடையே வழக்குகள், விசாரணைகள், நீதிமன்றத் தீர்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் நாசர் தலைமையிலான குழுவினர் மீண்டும் வெற்றி பெற்று பொறுப்பை ஏற்றார்கள். அவர்கள் முதல் முறை பொறுப்பில் இருந்த போதே சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய பிரம்மாண்டக் கட்டிடத்தை கட்டும் வேலைகளை ஆரம்பித்தார்கள். பாதி கட்டிடம் வளர்ந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கட்டுமானப் பணி தடைபட்டு நிற்கிறது. இப்போது மீண்டும் அதன் வேலைகளை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணி முடிந்த பிறகுதான் தனது திருமணம் நடக்கும் என்பதில் அதன் செயலாளர் விஷால் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நேற்று ஐதராபாத்தில் அவருடைய 'லத்தி' படத்தின் டீசர், முதல் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வில் பேசிய விஷால், “தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிய பிறகு வரும் முதல் முகூர்த்தத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன். 3500 நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் வாழ்க்கைக்கு நல்லது செய்ய வேண்டும் என எனது குழுவினர் உழைத்து வருகிறார்கள். அவர்களது வாழ்க்கைத் தரம் உயர உழைத்து வருகிறோம். அவர்களுக்கு மருத்துவ வசதி, இன்ஷுரன்ஸ் வசதிகள் கிடைக்க வேண்டும். கட்டிடம் முடிந்து திருமணம் நடக்கும் போது அனைவரையும் அழைப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற விழாவில் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், 'வலிமை' வில்லன் கார்த்திகேயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் ராணா, நந்தா, படத்தின் கதாநாயகி சுனைனா, மதுமிதா அவரது கணவர் நடிகர் சிவபாலாஜி, அபிநயா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.