''ஆளுநர் சனாதன பேச்சை அவர் வீட்டில் கூட கேட்க மாட்டார்கள்'' – டிடிவி தினகரன் அதிரடி பேட்டி

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற அண்ணாவின் கொள்கையே எங்களுடையது. ஆளுநர் சனாதனத்தை பற்றி பேச தேவையில்லை. ஆளுநர் சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்க மாட்டார்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மேம்படுத்தப்பட்ட அமமுக-வின் வலைதளத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘அமமுகவின் வலைதளத்தை மேம்படுத்தியுள்ளோம். Ammk.com மூலம் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். திமுகவை எதிர்ப்பதற்காக வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைப்போம். திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் கூட்டணி அமைப்போம்.
image
நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை..
அதிமுக என்ற கட்சி இன்று செயல்படாத நிலையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அதிமுக என்ற கட்சி பற்றி பேச எதுவும் இல்லை என்றார். நாடாளுமன்ற தேர்தலுக்காக 2023 நவம்பர் டிசம்பரில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அமமுக அணில் போல் செயல்பட்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
10% இடஒதுக்கீடு..
10% இடஒதுக்கீடு விவகாரம் பொறுத்த வரையில் 69% இடஒதுக்கீடு பாதிக்காத வகையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். அம்மா பெற்று தந்த 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு வராமல் இருக்க அரசு பார்த்து கொள்ள வேண்டும்.
பருவமழை பாதிப்பு – தமிழக அரசின் செயல்பாடு எப்படி?
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சரி வர செயல்பட்டு மக்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசை குறை கூறுவதை விட இன்னும் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
image
நளினி உள்ளிட்ட ஆறுபேர் விடுதலை குறித்து
உச்சநீதிமன்றம் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்ததை வரவேற்கிறோம். நீண்ட நாட்களாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்தது ஜனநாயக விரோத தவறான நடவடிக்கை. 
ஆளுநர் தேவையில்லை – அண்ணாவின் கருத்தே எங்கள் நிலைப்பாடு
ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்ற அண்ணாவின் கருத்துதான் எங்கள் கருத்து. ஆளுநர் சனாதனத்தை பற்றி பேச தேவையில்லை. ஆளுநர் சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்க மாட்டார்கள்.
மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தாலே இப்படித்தான் பேசுவார்களா என எனக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம். மேலும் அனைத்து விஷயங்களிலும் மத்திய மாநில அரசுகளை எதிர்க்கட்சி என எதிர்த்து பேசுவது முறையானது அல்ல’ என்று கூறினார்.
இதையும் படியுங்கள் – இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதி ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? – கேஎஸ்.அழகிரி கேள்வி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.