புதுடெல்லி: ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் டெல்லியில் இருந்து புறப்பட்டு இந்தோனேசியா சென்றடைந்தார். அவர், இந்தோனேசியாவில் 45 மணி நேரத்திற்குள் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இந்தோனேசியா, இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து கடந்த 1999ல் ஜி-20 அமைப்பை உருவாக்கின.
இந்தோனேசியாவின் பாலி தீவில் நாளையும், நாளை மறுநாளும் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ரஷ்ய அதிபர் புடின் சார்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ் கலந்து கொள்கிறார். இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு ஜி-20 நாடுகளின் தலைவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. பாலியில் உள்ள 24 நட்சத்திர ஓட்டல்களில் உலக தலைவர்கள், பிரதிநிதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 18,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
12 போர்க்கப்பல்கள், 13 ஹெலிகாப்டர்கள், 4 போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டார். இன்று இரவு இந்தோனேசியா தலைநகர் பாலி சென்றடைகிறார். முன்னதாக பிரதமர் மோடி இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவை குறித்து தலைவர்களுடன் விரிவான விவாதங்களை நடத்த உள்ளேன். பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடனான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளேன்.
நாளை மறுநாள் பாலியில் உள்ள இந்திய மக்களிடம் உரையாற்ற உள்ளேன். உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ, ஜி-20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைப்பார். டிச. 1 முதல் ஜி-20 தலைவர் பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கும்’ என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது இந்தோனேசியா பயணத்தின் போது, புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான சந்திப்பு உட்பட 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கிட்டத்தட்ட 45 மணி நேரத்திற்குள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
அடுத்த மாநாட்டின் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளதால், சில நாட்களுக்கு முன்பு ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற ஜி-20 அமைப்புக்கான கருப்பொருளை பிரதமர் மோடி வெளியிட்டார். தாமரையில் பூமி வீற்றிருப்பது போன்ற இலச்சினையும் அவர் வெளியிட்டார். வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா செயல்படத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.