திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட 4 பேர் சொந்த நாடான இலங்கை அனுப்பப்படுவர் என்று இன்று திருச்சி சிறப்பு முகாமில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மறைங்நதராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்ற 6 பேரும், தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன்படி, 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் ரவிச்சந்திரன் நளினி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். மற்ற 4 பேரான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர். அங்குள்ள தனித்தனி அறைகளில் அவர்கள் 4 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் 4 பேரும் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியானது. இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரதம்இருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, சிறப்பு முகாமுக்கு, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 4 குற்றவாளிகளும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியவர், அவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரினர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
இதற்கிடையில், இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர். பின்னர் நிருபர்களை சந்தித்த நளினி, தனது கணவர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார்