வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும், வெள்ளத்தால் சூழப்பட்ட விளைநிலங்களையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 58 முகாம்கள் தொடங்கப்பட்டு, 13,307 குடும்பங்களைச் சேர்ந்த 32,972 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட்டுகளும் வழங்கப்படுகின்றன. மேலும், 68 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பச்சைபெருமாநல்லூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், இம்முகாமில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிட மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு, உணவின் தரத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.
இம்முகாமில் தற்போது சுமார் 300 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேநீர், பிஸ்கட், பிரட் போன்ற உணவுப் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பச்சைபெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இம்மருத்துவ முகாமில் தற்போது 125 நபர்கள் உள்நோயாளியாகவும், தினமும் 60 நபர்கள் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
இதையடுத்து, உமையாள்பதி காலனியில் மழை நீரால் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும், சேதமடைந்த வீடுகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் விபரங்கள் கேட்டறிந்தார். பின்னர், உமையாள்பதி கிராமத்தில் 221 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பயிர் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்றும் அப்போது முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சீர்காழி பேருந்து நிலையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள், சேலை, போர்வை, பாய் போன்ற நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். முன்னதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் அண்ணாதுரை ஆகியோரிடம் கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்தும், பயிர்களுக்கான இழப்பீடு வழங்குவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 84,084 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய நிவாரணத் தொகையை பெற்று தருவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசின் நிவாரண உதவிகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 63 மின்கம்பங்கள், 2593 மின்மாற்றிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மின்இணைப்பு பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட 2,06,521 மின் இணைப்புகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2,06,141 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வீடுகளுக்கான அனைத்து மின் இணைப்புகளும் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 380 வீடுகள் அல்லாத மின்இணைப்புகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இவ்விடங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றிட உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அவற்றிற்கும் மின்இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இந்த ஆய்வின் போது முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.