புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி குறித்து கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமருக்கு, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்று பைனலுக்கு முன்னேறியது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பைனலில் 152/0 மற்றும் 170/0 இடையே மோதல் நடக்கிறது’ என கிண்டலாக தெரிவித்திருந்தார்.
அதாவது, கடந்த 2021ல் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் 151 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றிருந்தது. அதேபோல் தற்போது இந்திய அணியின் 168 ரன் இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இரு அணிகள் பைனலில் மோதுவதாக குறிப்பிட்டு பாக்., பிரதமர் கிண்டல் அடித்தார்.
இதற்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், பதிலடி கொடுத்துள்ளார். ‘இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவோம். ஆனால் நீங்கள் மற்றவர்களின் கஷ்டத்தில் மகிழ்ச்சியை தேடுகிறீர்கள்.
மற்றவர்களின் தோல்வியில் மகிழ்ச்சி அடைகிறீர்கள். அதனால்தான் நீங்கள் உங்கள் நாட்டின் நலனில் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நேற்று (நவ.,13) நடந்த டி20 உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement