அங்காரா: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தை சிரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் திட்டமிட்டு நிகழ்த்தியதாக அந்நாட்டு உளவுத் துறை தெரிவித்துள்ளது.
இஸ்தான்புலின் இஸ்டிக்லால் அவென்யூவில் ஞாயிறுக்கிழமை நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 81 பேர் காயமடைந்தனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரம் பிரபலமான சுற்றுலா தலம். இந்நிலையில், இங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள அதிபர் எர்டோகன், இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு சிரியாவை சேர்ந்த பெண் ஒருவர் திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து துருக்கி உளவுத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “குர்திஸ்தான் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் பின்னணியில் இருக்கிறார்கள். இந்த வெடிகுண்டுக்கு சிரியாவைச் பெண் ஒருவர் திட்டமிட்டு இருக்கிறார். அந்தப் பெண் சுருள் முடியுடன், ஊதா நிற உடை அணிந்திருந்தார். அந்தக் காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. போலீசார் மோப்ப நாயை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியதில் தங்கம், பணம் மற்றும் வெடிமருந்துகள் சிக்கியன” என்று தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, துருக்கியின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதங்களுக்கு எதிராக நடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.