புதுடெல்லி: டிசம்பர் 7 முதல் 29-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவை நாடாளுமன்ற விவகாரத் துறை விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பழைய கட்டிடத்தில் நடந்தாலும் கூட அரசாங்கம் புது நாடாளுமன்ற கட்டிடத்தின் துவக்க விழாவை டிசம்பர் இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ரூ.1200 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வெகு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
பொதுவாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3-வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ஆம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளாது.
இந்நிலையில், இந்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1, 5 தேதிகளில் நடைபெறும் நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதனை ஒட்டியும், புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் குறித்த நேரத்தைக் காட்டிலும் நீண்டு செல்வதாலும் இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், இந்த குளிர்கால கூட்டத்தொடரை பழைய கட்டிதத்திலேயே நடத்திவிட்டு பட்ஜெட் தொடரை புதிய கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளிர்கால கூட்டத்தொடரில் அரசு 1500-க்கும் மேற்பட்ட பழைய வழக்கொழிந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.