முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் நேரு சிலைக்கு அரசு சார்பில் வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நேருவின் உருவப்படத்துக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டபட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவை ஏற்காத ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து அவரும் அதை நிராகரித்தார். இந்த வேளையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த முடிவின் கோப்பை காலதாமதம் செய்ததால் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனை மேற்கோள்காட்டி 6 பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரியதால், தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எங்களுக்கு அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். ஆளுநர் உரிய நேரத்தில் முடிவெடுக்காததால் விடுதலை செய்ய ஏதுவாக இருந்திருக்கிறது. பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்று, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றி தற்போது விடுதலை செய்வது ஏற்றுக்கொள்வதாக இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பையே நீதிமன்றமே மாற்றுகிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. இது… தீவிரவாதிகள், யாரை வேண்டும் என்றாலும் கொலைசெய்யலாம். நாம் வெளியே வரலாம் என்ற மனபோக்கை ஏற்படுத்துகின்றது.
இதை, ஒரு சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன. மத்திய அரசு 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்” என்றார்.