விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தன.
அந்த வகையில், தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயரை அர்ஜூனா விருதுக்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சமீபத்தில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தி கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார். இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தடகளத்தில் சீமா பூனியா, பேட்மின்டனில் லக்ஷயா சென், பினாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது. மொத்தம் 25 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.