குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அண்மையில் வெளியிட்டிருந்தது. இதில் தற்போது மாநில அமைச்சர்களாக உள்ள 5 பேர் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர் உட்பட மொத்தம் 38 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இவர்களில் ஒருவர்தான் வக்ஹோடியா தொகுதி பாஜக எம்எல்ஏ மதுபாய் ஸ்ரீவத்சவா. 1995 இல் சுயச்சையாக நின்று வெற்றிப் பெற்ற இவர், பின்னர் பாஜகவில் இணைந்து தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிப் பெற்று, தற்போது ஆறாவது முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை தமக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காததால் கடும் அதிருப்தியில் உள்ளார் ய் ஸ்ரீவத்சவா.
‘1995 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக நின்று அமோக வெற்றிப் பெற்றேன். அப்போது குஜராத் மாநில பாஜகவில் உயர் நிர்வாக பொறுப்பில் இருந்த மோடியும், அமித் ஷாவும் எனது வெற்றியை கண்டு வியந்து, பாஜகவில் சேர எனக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களி்ன் வேண்டுகோளுக்கு இணங்கதான் 25 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் சேர்ந்தேன்.
அப்போதில் இருந்து தொடர்ந்து 5 முறை தேர்தலில் வெற்றிப் பெற்று கட்சிக்கு பெருமை சேர்த்துள்ளேன். ஆனால் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, எனக்கு பதிலாக வதோதரா தொகுதி பாஜக மாவட்ட தலைவர் அஸ்வின் படேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி்த் தேர்தலி்ல் கூட வெற்றி பெறாத அவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளதால் கட்சித் தலைமை மீது கடும் கோபத்தில் உள்ளேன், கட்சியின் டெல்லி தலைமையின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, வரும் தேர்தலில் மீண்டும் சுயேச்சையாக களமிறஙகி பாஜகவுக்கு பாடம் புகட்ட உள்ளேன்’ என்று சபதம் இட்டுள்ளார் மதுபாய் ஸ்ரீவத்சவா.
பாகுபலி என்று உள்ளூர்வாசிகளால் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீவத்சவாவின் பெயர், 2002 குஜராத் கலவரங்கள் தொடர்பான வழக்கில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.