கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை ஒப்படைக்க உத்தரவு: ஐகோர்ட் அதிரடி!

கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் தந்தைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி அவரின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். அந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம், அதன் அறிக்கைகளை பெற்று ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.

பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டதாக 214 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் மனுதரார் (பெற்றோர்) ஒப்படைக்கப்படவில்லை என்றும் கடந்த விசாரணையின் போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஒப்படைக்கவில்லை என தெரிவித்தார்.

மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை எனவும், அதை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார். மேலும் உடற்கூராய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, உடற்கூராய்வு மூலம் ஒருவர் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் என தெரிவித்ததுடன், நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனுத் தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.