கடலூர்/ மயிலாடுதுறை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்ப்டட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடலூரில் ஆய்வு: வடகிழக்கு பருவமழையினால் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, மழையால் வீடுகளை இழந்த 13 பயனாளிகளுக்கும், கால்நடையை இழந்த ஒரு பயனாளிக்கும், நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், சிதம்பரம் வட்டம், வல்லம்படுகையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகையும், 5 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 616 நிரந்தர மற்றும் தற்காலிக முகாம்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கனமழை ஏற்பட்டதன் காரணமாக தற்போது வரை 30 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 149 நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் பரவனாற்றிலிருந்து வரப்பெற்ற மழைநீரினால் 140 ஹெக்டர் வேளாண் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளுக்குட்பட்ட கூரைவீடு பகுதி சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4100, வீதம் 41,000 ரூபாயும், முழுமையாக கூரைவீடு சேதமுற்ற ஒரு பயனாளிக்கு 5000 ரூபாயும், ஓட்டு வீடு பகுதி சேதமடைந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,200 வீதம் 10,400 ரூபாயும், கால்நடையை இழந்த ஒரு பயனாளிக்கு 16,000 ரூபாயும், என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.72,400 மதிப்பிலான நிவாரண உதவிகளையும், வேட்டி, புடவை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களையும் தமிழக முதல்வர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சிதம்பரம் வட்டம், வல்லம்படுகைக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளை பார்வையிட்டார். இப்பகுதிகளில்கனமழையால் ஒரு சிமெண்ட் ஷீட் வீடு மற்றும் 2 குடிசை வீடுகள் முழுவதும் சேதமடைந்து பாதிக்கப்பட்ட 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் 15,000 ரூபாய் மற்றும் பகுதியாக சேதமடைந்த 2 குடிசை வீட்டு பயனாளிகளுக்கு தலா ரூ.4,100 வீதம் 8200 ரூபாய் நிவாரண தொகையும், வேட்டி, புடவை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களையும், 5 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.
கனமழையால் ஆறு, வாய்க்கால்களின் கரைகளில் உடைப்பு ஏற்டாத வண்ணம் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என்றும், மழை காலத்தில் இடி, மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்திட, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், வெள்ளப்பாதிப்புள்ளாகும் பகுதிகளில் தேவையான நீர் இறைப்பான் இயந்திரங்களையும், மரம் அறுக்கும் கருவிகளையும், மணல் மூட்டைகளையும் தயார் நிலையில் வைத்திட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
சீர்காழியில்… – வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும், வெள்ளத்தால் சூழப்பட்ட விளைநிலங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 58 முகாம்கள் தொடங்கப்பட்டு, 13,307 குடும்பங்களைச் சேர்ந்த 32,972 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட்டுகளும் வழங்கப்படுகின்றன. மேலும், 68 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பச்சைபெருமாநல்லூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கு சென்று பார்வையிட்டார். இம்முகாமில் தற்போது சுமார் 300 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேநீர், பிஸ்கட், பிரட் போன்ற உணவுப் பொருட்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பச்சைபெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை முதல்வர் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இம்மருத்துவ முகாமில் தற்போது 125 நபர்கள் உள்நோயாளியாகவும், தினமும் 60 நபர்கள் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர், உமையாள்பதி கிராமத்தில் 221 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பயிர் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 84,084 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய நிவாரணத் தொகையை பெற்று தருவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 63 மின்கம்பங்கள், 2593 மின்மாற்றிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மின்இணைப்பு பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட 2,06,521 மின் இணைப்புகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2,06,141 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடுகளுக்கான அனைத்து மின் இணைப்புகளும் வழங்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள 380 வீடுகள் அல்லாத மின்இணைப்புகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இவ்விடங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றிட உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அவற்றிற்கும் மின்இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.