அறந்தாங்கி அருகே திருப்புனவாசலில் படிக்கும் இரண்டு மாணவர்களுடன் அவர்களது சித்தப்பாவும் இடிதாக்கி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகே பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சஞ்சய் மற்றும் மாணவி சஞ்சனா. திருப்புனவாசல் ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் சஞ்சய் 11 ஆம் வகுப்பும், சஞ்சனா 10ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களை பள்ளியைவிட்டு அழைத்துச் செல்வதற்காக இவர்களது சித்தப்பா இளையராஜா இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து மாலை இரண்டு மாணவர்களையும் அழைத்துச் சென்றபோது, சிங்காரக்கோட்டை கோவில் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பெய்த மழை பெய்திருக்கிறது.
அப்போது திடீரென இடி தாக்கியதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே தரையில் சாய்ந்துள்ளனர். இவர்களை மீட்டு திருப்புனவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர் மூன்று பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து மூன்று பேரின் உடல்களும், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு மாணவர்களுடன் அவர்களது சித்தப்பா உயிர் இழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி மாலதி (47) மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கம்போல இன்று விவசாய பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது பலத்த மழையினால் ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மகாலிங்கம் தங்கமாரி , முருக லட்சுமி மற்றும் ஈஸ்வரி ஆகிய 4 பேருக்கும் காயம் ஏற்பட்டு தற்போது விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM