புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பறையத்தூர் கிராமத்தில் இரு மாணவர்கள் பள்ளியில் படித்து வந்தனர். தற்போது பருவமழை துவங்கி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தற்போது தினமும் பள்ளி முடிந்ததும் மாலை அந்த மாணவர்களின் சித்தப்பா இளையராஜா அவர்களை பள்ளியிலிருந்து வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டு வந்துள்ளார். வழக்கம் போல், இன்று பள்ளி முடிந்ததும் மாலை இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்புனவாசலிலிருந்து பறையூருக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, சிங்காரக்கோட்டைகோவில் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் மழை பெய்யத் துவங்கியிருக்கிறது. மழையோடு மழையாக சென்றுவிடலாம் என்று டூவிலரை இயக்கி வந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்புனவாசல் போலீஸார் மூன்று பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் ஆவுடையார்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை துவங்கி ஆங்காங்கே இடி, மின்னலுடன் மழைபெய்து வருவதால், மழை நேரங்களில் மரங்களுக்கு கீழே ஒதுங்கக்கூடாது, மழைநேரங்களில் பெரும்பாலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.