திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (16ம் தேதி) திறக்கப்படுகிறது. இதையொட்டி நான்கு வருடங்களுக்குப் பின்னர் பக்தர்களை வரவேற்க சபரிமலை முழு அளவில் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (16ம் தேதி) திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. 41 நாள் நீளும் மண்டல காலம் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.
பக்தர்கள் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், செங்கனூர், கோட்டயம் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 4 வருடங்களுக்குப் பிறகு இந்த முறை புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் தயாராக உள்ளன. 16ம் தேதி முதல் இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்குகிறது. சன்னிதானம், பம்பை உள்பட இடங்களில் மருத்துவமனைகளும் திறக்கப்பட்டுள்ளன.