மதுரை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 1,775 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஐகோர்ட் கிளை, குண்டர் சட்டத்தில் கைதானவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ஆத்துவழி கிராமத்தைச் சேர்ந்த சுனிதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் ஜெயராமன், திருமங்கலம் – தென்காசி – செங்கோட்டை இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார். அக். 19ல் என் கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். எனவே, என் கணவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள், ஐகோர்ட்டில் தினமும் ஏராளமாக தாக்கலாகின்றன. இந்த மனுக்களை விசாரிக்க 6 மாதம் வரை ஆகும். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கைப்படி, 2021 வரையிலான 10 ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் 1,775 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. பல்வேறு வழக்குகளில் குண்டர் சட்டம் பாய்கிறது. குண்டர் சட்ட நடவடிக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே, அவர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு கூடுதல் தலைமை செயலர் 4 வாரத்திற்குள் ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த உத்தரவு எவர் மீதும் குற்றம் கண்டுபிடிப்பதற்கான முயற்சி அல்ல. மாநில அரசு இந்த உத்தரவை கருத்தில் கொண்டு தடுப்பு காவல் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். சட்ட விரோதமாக தடுப்புக்காவலுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிக்க நேரிடும். இவ்வாறு உத்தரவிட்டனர்.