சூலூர்: கோவை ராமநாதபுரம் அங்கண்ணன் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன் (53). இவரது மனைவி பழனியம்மாள் (49). இவர்களது மகள் தீட்சனாதேவி (23). பிகாம் பட்டதாரியான இவர் வேலைக்கு சென்று வந்தார். இவர்கள் இதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் இதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இங்குள்ள வீட்டை விற்றுவிட்டு சூலூர் கருணையம்மாள் பிள்ளையார் கோவில் வீதியில் வாடகை வீட்டில் குடியேறினர். 3 பேரும் வேலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை காந்தரூபன் தனது அண்ணனுக்கு போன் செய்து, ‘‘நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அதிர்ச்சியடைந்த அண்ணன் பதறியடித்து அங்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பலமுறை கதவை தட்டிய பின்னர் காந்தரூபன் அரை மயக்கத்தில் தள்ளாடியபடி கதவை திறந்தார். அவர் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதும், உள்ளே பழனியம்மாளும், தீட்சனாதேவியும் விஷம் குடித்து இறந்து கிடந்ததும் தெரியவந்தது. உடனடியாக காந்தரூபனை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும், காந்தரூபன், ‘‘ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் பணம் நஷ்டமாகிவிட்டது. அதனால் இருந்த சொத்துக்கள் பறிபோயின. வீட்டை விற்று கடனை அடைத்ததுபோக மீதி ரூ.19 லட்சம் இருந்தது. அதனை வேலை செய்யும் இடத்தில் தெரிந்தவர்களுக்கு கடன் கொடுத்தேன். இந்நிலையில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். ஆனால் கடன் பெற்றவர்கள் திருப்பி தராததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம்’’ என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.