சென்னை: வரும் காலங்களில், சமுதாயம் மாறும்போது சட்டங்களும் மாறும். அதற்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று சீர்மிகு சட்டப் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளியின் 3-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் தலைமையில் நடந்த விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மூத்தவழக்கறிஞர் இ.ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இளங்கலை, முதுகலை சட்டம்பயின்ற 714 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: இளம் வழக்கறிஞர்களுக்கு சொல்தான் பிரதான தேவை. சொல் என்பது மனிதனின் இதயத்தைதிறக்கும் திறவுகோல். அதுமட்டுமின்றி, பேசிக்கொண்டிருக்கும் வாயையும் அது மூடச் செய்யும். சொல்லுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. வழக்கை யாராலும் மாற்ற முடியாது. அதை சொல்கின்ற விதம், அந்த சொல்லினுடைய தாக்கம்தான் அதை மாற்றும்.
வழக்கறிஞர்கள் எதை சொல்ல வேண்டுமோ, அதை கூர்மையாக சொல்ல வேண்டும். தாங்கள் சொல்வதை மற்றவர்களையும் கேட்க வைக்க வேண்டும். நீதிமன்றத்தில் பேசும்போது வழக்கறிஞர்கள் தாங்கள் சொல்லும் கருத்தை, 5 வயது குழந்தைகளுக்குகூட புரியும் வகையில்சொல்ல வேண்டும். வழக்கறிஞர்கள், உலகத்தின்அணுகுமுறையை தெரிந்துகொள்ள வேண்டும். சமுதாயம்எப்படி தன்னை வழிநடத்துகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் வழக்காடும்போது தேவையானதை மட்டுமே பேச வேண்டும். வரும் காலங்களில், சமுதாயம் மாறும்போது சட்டங்களும் மாறும். அதற்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.