புதுடெல்லி: ‘புதிய மற்றும் வளர்ந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்’ என்று மாணவர்களிடையே பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மூ அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் தினத்தையொட்டி டெல்லி ராஷ்ட்டிரபதி பவனில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஜனாதிபதி திரவுபதி முர்மூவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்கள். அப்போது ஜனாதிபதி திரவுபதி கூறியதாவது: குழந்தை பருவம் என்பது மிகவும் அழகான காலகட்டம். அப்போது அவர்கள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். இது தான் அவர்களை உயிர்ப்புடன் உருவாக்குகின்றது. குழந்தைகள் தினத்தில் குழந்தைகளின் அப்பாவித்தனம் மற்றும் தூய்மையை கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு புதிய தலைமுறையும் புதிய சாத்தியங்களையும், புதிய கனவுகளையும் கொண்டு வருகின்றனர். இது தொழில்நுட்ப மற்றும் தகவல் புரட்சியின் புதிய சகாப்தமாகும். தற்போதுள்ள குழந்தைகள் பல்வேறு உள்நாட்டு, சமூக மற்றும் சுற்றுச்சூால் பிரச்னைகள் குறித்து அறிந்துள்ளனர். தொழில்நுட்பத்தின் வருகையின் காரணமாக அறிவு மற்றும் தகவல்கள் அவர்களது விரல் நுனியில் உள்ளது. உயர்ந்த கனவு காணுங்கள். புதிய மற்றும் வளர்ந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள். இன்றைய கனவு நாளை நனவாகும். குழந்தைகள் எப்போதும் இந்தியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருங்கள், பெற்றோர்களுக்கு மரியாதை கொடுங்கள் மற்றும் தாய்நாட்டை நேசியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.