சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (நவ.16) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தற்போது தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 15-ம் தேதி (இன்று) சில இடங்களிலும், நவ. 16, 17,18-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். எனினும், இதற்கு முந்தைய நாட்களைப் போல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு குறைவு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
நவ. 14-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செ.மீ., ராமநாதபுரம் வாலிநோக்கத்தில் 7 செ.மீ.,நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருவள்ளூர் மாவட்டம்சோழவரம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவானது.
தினசரி மின்தேவை சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் குறைவு
வடகிழக்குப் பருவமழை காரணமாக, தினசரி மின்தேவை சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் மின்தேவை தினமும் சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடை காலத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரம் மெகாவாட்டாகவும், குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாகவும் இருக்கும்.
கடந்த மாதம் தினசரி மின் தேவை சராசரியாக 14,500 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு ஏராளமானோர் ஊருக்குச் சென்றனர்.தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள், அரசு, தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. மேலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடும் குறைந் \துள்ளது.
இந்நிலையில், தினசரி மின்தேவை 11,200 முதல் 11,600 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.