திருவண்ணாமலை மாவட்டம் சடையனோடை கிராமத்தில் வசித்து வருபவர் உத்தராசா (48). கல்லூரி பேராசிரியரான இவருக்கு கலையரசி (45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கிரிஷ்வரன் (15) என்ற மகன் உள்ளார். இவரது மனைவி திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கணினி பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கலையரசி துணியை துவைத்துவிட்டு காய வைக்க கொடி கம்பியில் துணியை போட்டு உள்ளார். அப்போது மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் ஈரத் துணி கம்பியில் போட்டதும் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார்.
சத்தம் கேட்டு அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் வந்து கலையரசியை தொட்டு காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த கணவர் உத்தராசா, மகன் கிரிஷ்வரன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி பேராசிரியை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.