பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் புதியதாக கட்டப்படும் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் அடிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜ அரசு, ரூ.1,800 கோடி செலவில் 7,601 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதிக்குள் டெண்டர் எடுத்த நிறுவனங்கள் வகுப்பறை கட்டுமான பணியை தொடங்க உள்ளன. இந்நிலையில் புதிதாக கட்டப்படும் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் அடிப்பதுடன் வகுப்பறைகளுக்கு சுவாமி விவேகானந்தரின் பெயர் சூட்ட கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கட்டுமானம் முடிந்த பின் காவி வண்ணம் பூச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதை கல்வி இயக்குனரகங்களும் உறுதி செய்துள்ளன. கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கல்விதுறையையும் காவி மயமாக்க ஆளும் பாஜ அரசு முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றன. மாணவர்களை படிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் உணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இது உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
* தேசிய கொடியிலும் காவி இருக்கிறதே?
மாநில அரசின் விவேகா திட்டத்தில் 7,601 பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கலபுர்கி மாவட்டம், மாடிஹால் கிராமத்தில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய, முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், ‘‘அனைத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதை காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். புதியதாக கட்டப்படும் பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவதில் என்ன தவறு உள்ளது. நமது நாட்டின் தேசியகொடியின் மேல் பகுதியில் இருப்பது செங்காவி வண்ணம் தானே. இதை ஏன் எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை’’ என்றார்.