Doctor Vikatan: எனக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் ஒவ்வொரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் உடனே சளி பிடித்துக்கொள்கிறது. அதனாலேயே தீபாவளி தவிர்த்து மற்ற நாள்களில் எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகிறேன். எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் சளி பிடிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
எண்ணெய் தேய்த்துக் குளித்தாலே சளி பிடித்துக் கொள்ளும் என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். சிறிது மிளகுத்தூளை உச்சந்தலையில் தடவிய பிறகு எண்ணெய்க் குளியல் எடுத்தால் சளி பிடிக்காது. குளித்து முடித்து, தலையைக் காய வைத்ததும் சிறிது மிளகைப் பொடித்து மெல்லிய துணியில் வைத்து உச்சந்தலையில் தேய்த்தாலும் சளித் தொந்தரவு பாதிக்காது.
நல்லெண்ணெயில் சிறிது பூண்டு, மிளகு, சுக்கு, வெற்றிலை சேர்த்து மெலிதாகச் சூடாக்கி, தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் கப நோய்கள் வராமல் தடுக்கலாம். தும்பைப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சிப் பயன்படுத்தினாலும் சளி பிடிக்காது. எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் சாம்பிராணி புகை போட்டு தலையை உலர்த்தலாம்.
அந்தக் காலத்தில் எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு தலை மற்றும் உடலை உலர்த்த அகில் கட்டைப் புகையைப் பயன்படுத்திய வழக்கம் இருந்தது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் சளி பிடிக்கும் என பயப்படுவோர், மேற்குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றலாம். இதையும் மீறி எண்ணெய்க் குளியல் உங்களுக்கு சளித் தொல்லையை உருவாக்குவதாக உணர்ந்தால் சித்த மருத்துவ முறைகளைப் பின்பற்றலாம்.
தாளிசாதி சூரணம், ஆடாதோடை மணப்பாகு என கபத்தை அறுக்க ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. சித்த மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றைப் பயன்படுத்தினால், பயமின்றி எண்ணெய்க் குளியல் எடுக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.