புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் விரைவில் வழங்கப்படும் என குழந்தைகள் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.
பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் தினவிழா நேற்று இ.சி.ஆர்.,ரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. தொடக்ககல்வி துணை இயக்குனர் பூபதி வரவேற்றார். செல்வகணபதி எம்.பி., வாழ்த்துரை வழங்கினார்.
குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
இந்தியாவை உலகில் சிறந்த நாடாக கொண்டு வரவுள்ளவர்கள் மாணவர்கள்தான். அதனால் தான் மத்திய அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சிறந்த கல்வியை பெற்று உயர்ந்தவர்களாக வரவேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியமானது. அந்த கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அந்த கடமையை புதுச்சேரி அரசு சரியாகவும், சிறப்பாகவும் செய்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புதுச்சேரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிறிய மாநிலத்தில் அதிகளவில் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளன. பெற்றோர்களுக்கு செலவின்றி எளிதாக உயர்கல்வி கற்கும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. இதனால்தான் கூலி தொழிலாளிகளின் பிள்ளைகளும் டாக்டர்களாக உள்ளனர்.
கடின உழைப்பு தேவை
கடின உழைப்பிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும். சில நேரங்களில் நாம் விரும்பிய பாடங்கள் கிடைக்காமல் போனாலும் சோர்ந்துவிடக்கூடாது. கிடைப்பதை வைத்து முன்னேற வேண்டும். எதிலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
நன்றாக படித்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், படித்த பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல் இருக்க வேண்டும். 100 சதவீதம் வெற்றி பெற்ற பள்ளியை உருவாக்கும் விதத்தில் உங்கள் கல்வி இருக்க வேண்டும்.
நல்ல புத்தகம் படிக்க வேண்டும்
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் உடனுக்குடன் உங்கள் சந்தேகங்களை மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மழைக்காக விடுமுறை விட்டாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஆன் லைன் மூலம் கல்வியை கற்கும் வாய்ப்பு உள்ளது. என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி இருந்தாலும், நுாலகங்களுக்கு சென்று, நல்ல புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
பெற்றோர், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு நடந்தால் வாழ்கையில் முன்னேறலாம். அதே போல் பெரியவர்களை மதித்து நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் அடிப்படையிலேயே நாம் கற்க வேண்டும்.
விரைவில் லேப்டாப்
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மீண்டும் இலவச சைக்கிள் வழங்கப்படும். அதேபோன்று, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் இலவச லேப்டாப் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement