சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், வலது கால் அகற்றுப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) இன்று உயிரிழந்தார். தொடர்ந்து, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜகாந்தி மருத்துவமனையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,”வீராங்கனை பிரியாவுக்கு, ரத்த நாளங்களில் தொடர் பாதிப்பு இருந்தது. சிறப்பு மருத்துவர்கள் குழு மூலம் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம்.
நேற்று அவருக்கு சிறுநீரக பாதிப்பு, இருதய பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த இழப்பு, ஈடுசெய்ய முடியாத ஒன்று. பெரியார் நகர் மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் தொடர் விசாரணை நடத்தப்படுகிறது.
வீராங்கனை பிரியாவுக்கு அரசு வேலை கொடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இருப்பினும், தற்போது அவரது குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். காவல்துறையில் புகார் செய்து சட்ட நடவடிக்கை எடுப்போம். முதலில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது வீடு அருகில் என்பதால் பெரியார் நகர் மருத்துவமனைக்கு மாற்றினார்களா என்பதைப் பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார். துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும் என்றும் மருத்துவர் குழு விசாரணை நடத்தும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
முன்னதாக, மறைந்த வீராங்கனை பிரியாவுக்கு, மூட்டு பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை குணமாக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின்னரும், காலில் வலி ஏற்பட்டு, வீக்கமும் இருந்துள்ளது. முதலில் சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சென்றதாக கூறப்படுகிறது.
அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, தான் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னரும் கால் வீக்கமடைந்துள்ளது. இதனால், உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் வலது காலை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர்.
இதனையடுத்து, பெற்றோர்கள் ஒப்புதல் உடன், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. மேலும், பெரியார் நகர் மருத்துவர்களின் தவறான சிகிச்சை வீராங்கனையின் உயிரையே பறித்துவிட்டது என தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவியான பிரியாவுக்கு சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.