கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள மேலமுனையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் மறைந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்திவரும் சித்ராவுக்கு, ஆதரவு தர யாரும் இல்லை. குடியிருக்கச் சொந்தமாக வீடும் இல்லை. இதனால் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள ஏதுவாக, அரசு இலவச வீட்டுமனை கேட்டு கரூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார்.
இந்நிலையில், அவரது நிலைமையை உணர்ந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சித்ராவுக்கு இலவசமாக வீடு வழங்க முடிவுசெய்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் அவருக்கு வீடு வழங்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ரூ.8.68 லட்சம் மதிப்புடைய வீட்டை ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணையினை நேற்று ஆட்சியர் வழங்கினார்.
குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட சித்ராவின் குழந்தைகளின் கைகளில், அந்த வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையினை வழங்கினார். நேற்று அனுசரிக்கப்பட்ட குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற நிலையிலிருந்த குடும்பத்தைச் சேர்ந்த சித்ராவின் இரு பெண் குழந்தைகளின் நலன் கருதி இந்த வீடு மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதோடு மாவட்ட ஆட்சியர் சித்ராவின் இரண்டு பெண் குழந்தைகளையும் கைகுலுக்கி வாழ்த்தியதோடு, அவர்களுக்குப் பள்ளி செல்லும் குழந்தைகள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.4,000 வழங்குவதற்கு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்த சித்ராவிடம் பேசினோம்.
“எனது கணவர் இறந்துவிட்ட நிலையில், வருமானத்துக்கு வழியில்லாமல், இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு, அல்லாட்டமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு வந்தேன். எங்களுக்கு அனுசரணைக் காட்டி, ஆதரவு கொடுக்க யாருமில்லை. குடியிருக்கவும் வீடில்லை. இதனால், எங்க வாழ்க்கையே ரொம்ப மோசமா இருந்துச்சு. அதனால், இலவச வீட்டுமனைக் கேட்டு, என்னோட ரெண்டு பெண் பிள்ளைகளோட போய் மாவட்ட ஆட்சியர்கிட்ட மனு கொடுத்தேன். ‘பட்டாவே கிடைக்காது’ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். பலரும் அதைச் சொல்லித்தான் பயமுறுத்துனாங்க. ஆனா, ரூ.8.68 லட்சம் மதிப்புடைய வீட்டையே எனக்கு வழங்கியிருக்காங்க.
ரூ.7.50 லட்சம் அரசு மானியம் போக நான் கையிலிருந்து கட்ட வேண்டிய தொகை ரூ.1.18 லட்சத்தை மாவட்ட ஆட்சித் தலைவரே தனது விருப்ப உரிமை நிதியிலிருந்து வழங்கினார். நேரு நகர் தோரணக்கல்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் எனக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் புதிதாக ஒரு வீட்டை ஒதுக்கீடு செஞ்சுருக்காங்க. கணவர் இல்லாமல் எப்படி வாழப் போகிறோம், இரண்டு பெண் பிள்ளைகளை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம் என்று கலங்கியிருந்த நேரத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சார் இந்த பேருதவியைச் செய்துள்ளார். இனி, எப்படியாச்சும் பொழைச்சுக்குவோம். என் மகள்களை வம்பாடுபட்டாவது படிக்க வச்சு, நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவேன். சொந்த வீட்டுல தூங்குற சொகத்தை என் பிள்ளைங்களாவது அனுபவிக்கட்டும். இந்த உதவியை என் காலத்துக்கும் மறக்கமாட்டேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.