அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்ட சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 7-ம் தேதி மூட்டுவலி பிரச்சனை காரணமாக, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதில் ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்ட கட்டு இறுக்கமாக கட்டப்பட்டதாலும், அதிக நேரம் வைத்திருந்ததாலும், ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் ரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆபத்தான நிலையில் கடந்த 8-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மறுநாள் (நவ.9-ம் தேதி) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி பிரியா உயிரிழந்தார்.
இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மாணவி பிரியாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல்துறையினரிடமும் மருத்துவரிடமும், தனது மகளின் இறப்பிற்கு காரணம் என்ன என்று கேட்டு வருகின்றனர். கால்பந்து வீராங்கனையான மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்ட சோகம் நீங்காத நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.