ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகமது சதக் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் 8 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் வெளியூரை சேர்ந்த மாணவர்களும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 8 மாணவர்களுக்கு திடீரென நேற்று இரவு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக அந்த மாணவர்கள் இரவு 11 மணியளவில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு இரவில் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கீழக்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாகீர் உசேன், விடுதி மாணவர்களுக்கு நேற்று இரவு வெளியே உள்ள ஓட்டலில் இருந்து பரோட்டா வாங்கி கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட 8 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.
மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரோட்டா உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.