சேலம்: தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால், 30 சதவீதம் லாரிகளுக்கு லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் உள்ளன. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பெரிய வெங்காயம், பூண்டு, கொண்டைக்கடலை, கடலை பருப்பு, துவரம் பருப்பு உள்பட மளிகைப்பொருட்களும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பிவிசி பிளாஸ்டிக் பொருட்களும் கொண்டு வரப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, வெல்லம், கயிறு, இரும்பு பொருட்கள், மஞ்சள், கோழித்தீவனம் உள்பட பல்வேறு பொருட்கள் வட மாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகள் இயக்கத்தில் டோல்கேட் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தமிழகத்தில் இருந்து செல்லவேண்டிய சரக்கும், வட மாநிலங்களில் இருந்து வரவேண்டிய சரக்குகளும் தடைபட்டுள்ளது. இதனால் 30சதவீதம் லாரிகள் லோடுகள் இல்லாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தன்ராஜ் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் லாரி தொழில் கடுமையாக பாதித்தது. பல்லாயிரம் லாரிகளுக்கு இன்னும் சரிவர சரக்குகள் கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான், தகுதிச்சான்று கட்டணம் பழைய முறைப்படி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் உள்ளது. வட மாநிலங்களில் தமிழகத்திற்கு வரும் எலக்டிரானிக்ஸ், பெரிய வெங்காயம், எலக்டிரிக்கல் பொருட்கள், பிவிசி பைப், இரும்பு பைப், பாய்லர், அன்றாட வீட்டு உபயோக பொருட்கள், டயர், சிமெண்ட், பருத்தி, சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவைகளின் சரக்குகள் கிடைப்பது குறைந்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் வட மாநிலங்களுக்கு செல்லும் வெல்லம், ஜவ்வரிசி, மஞ்சள், கோழித்தீவனம், பிளாஸ்டிக் பைப்புகள், அரிசி, தானிய வகைகளின் சரக்குகள் குறைந்துள்ளது. மொத்தத்தில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் 30 சதவீதம் லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த லாரி எண்ணிக்கையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்று, இரண்டு லாரிகளை வைத்து இருக்கும் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நம்பி இருக்கும் டிரைவர், கிளீனர்களுக்கு வருவாய் பாதித்துள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்களும் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு தன்ராஜ் கூறினார்.