பாலி: ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஒப்படைத்தார். அதனை, பிரதமர் மோடி பெற்று கொண்டார். அடுத்தமாதம் டிச.,1 முதல் இந்த அமைப்பின் தலைவராக இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்க உள்ளது.
‘ஜி-20’ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின், இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். நேற்று, மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரை மோடி சந்தித்து பேசினார்.
இன்று(நவ.,16) ‘ஜி20’ அமைப்பின் மூன்றாவது அமர்வு ‘ டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன்’ என்ற தலைப்பில் நடந்தது. இம்மாநாட்டிலும் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதன் இடையே பிரிட்டன், இந்தோனேஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த நரேந்திர மோடி, இரு நாட்டு உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆக்கப்பூர்வமானது
இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையிலான சந்திப்பின் போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. பலனுள்ள வகையில் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு உறவு, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
சதுப்பு நிலக்காட்டில் மோடி
இந்தோனேஷியாவில் உள்ள சதுப்பு நில காட்டு பகுதிக்கு ஜி20 அமைப்பு தலைவர்கள் சென்றனர். அங்கு அவர்கள், மரக்கன்று நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை, இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடா வரவேற்றார்.
ஆண்டு ஜி -20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ள இந்தோனேஷியாவின் தலைமையில், அந்நாடும், ஐக்கிய அரபு எமீரேட்சும் இணைந்து துவக்கியுள்ள பருவநிலைக்கான சதுப்பு நிலக்காடுகள் கூட்டணியில் இந்தியாவும் இணைந்து உள்ளது.
சந்திப்பு
மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தலைவர்கள், அங்கு இருந்த அரங்கம் ஒன்றில் அமர்ந்திருந்தனர். அப்போது நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் பைடனும் எதிரேதிரே அமர்ந்திருந்தனர். இரு தலைவர்களும் கைகளை அசைத்து வணக்கங்களை பரிமாறி கொண்டனர்.
டிஜிட்டல் பலன்கள்
ஜி-20 மாநாட்டில் ‘டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேசன்’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் மோடி பேசியதாவது: டிஜிட்டல் கட்டமைப்பை உள்ளடக்கியதாக மாற்றினால், சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை கடந்த சில ஆண்டு கால இந்தியாவின் அனுபவம் நமக்கு காட்டுகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் பணப்பரிவர்த்தனை 40 சதவீதம் யுபிஐ வழியாக நடந்துள்ளது.
டிஜிட்டல் அடையாளம் மூலம் 46 கோடி வங்கிக்கணக்குகளை துவக்கினோம். இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் போது அதன் பலன்களை உணர முடியும். டிஜிட்டல் பரிமாற்றத்தின் பலன்கள் சிறிய அளவு மக்களிடம் மற்றும் சேரமல் தடுப்பதன் பொறுப்பு ஜி20 நாடு தலைவர்களுக்கு உள்ளது.
இந்தியாவின் டிஜிட்டலை, மக்கள் அணுக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில், பெரிய டிஜிட்டல் வேறுபாடு உள்ளது. மிகவும் வளர்ந்த நாட்டு மக்கள் டிஜிட்டல் அடையாளம் இல்லாமல் உள்ளனர். 50 நாடுகளில் மட்டுமே டிஜிட்டல் பரிமாற்ற அமைப்பு உள்ளது.
இந்த கருத்து அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜி20 பொறுப்புக்கு தலைமை ஏற்று செயல்படும் போது ஜி20 அமைப்பு தலைவர்களுடன் இந்தியா இணைந்து செயல்படும்.இந்தியா தலைமையின் கீழ் ‘ ஒரே இந்தியா, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடக்கும் ஜி20 அமைப்பின் ஒரு அங்கமாக ‘ வளர்ச்சிக்காக தகவல்’ என்ற தலைப்பும் இருக்கும். இவ்வாறு மோடி பேசினார்.
பல மாநிலங்களில்…
இதன் பிறகு இந்த கூட்டத்தில் நிறைவுரையாற்றிய பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவின் ஜி-20 தலைமை பதவியானது, அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமானதாகவும், செயல்பாடு சார்ந்ததாக இருக்கும்.
அடுத்த ஒரு வருடத்தில் ஜி20 கூட்டு நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உலகளாவிய முதன்மை இயக்கமாக செயல்படுவது எங்களது முயற்சியாக இருக்கும். பெண்கள் தலைமையில் வளர்ச்சி என்பதற்கு ஜி20 அமைப்பின் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்தியாவில் பல நகரங்கள் மற்றும் மாநிலங்களில் ஜி20 கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வோம். உலகளாவிய மாற்றத்திற்கான கருவியாக ஜி -20 அமைப்பை மாற்றுவோம். இவ்வாறு மோடி பேசினார்.
ஒப்படைப்பு
இதனை தொடர்ந்து ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியாவிடம், இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ ஒப்படைத்தார். டிச.,1 முதல் தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்று கொள்ள உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்