சீர்காழியில் மழை நீரில் மூழ்கிய புத்தகங்களை வெயிலில் காய வைத்த மாணவி: புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை

சீர்காழி:சீர்காழி பகுதியில் மழைநீரில் மூழ்கிய புத்தகங்களுக்கு பதிலாக புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் வசிக்கும் சுந்தரவதனம் என்பவரது மகள் பரணிஸ்ரீ. இவர் ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் வீட்டில் இருந்த புத்தகங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகி விட்டன. தண்ணீரில் மூழ்கி வீணான புத்தகங்களை மாணவி வீட்டின் முன்பு சாலையில் வைத்து வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அனைவரும் கவலையுடன் பார்த்து சென்றனர். சேதம் அடைந்த புத்தகத்திற்கு பதிலாக புதிய புத்தகம் வழங்க வேண்டும் என மாணவி கோரிக்கை விடுத்தார்.

இதே போல் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் சேதமடைந்துள்ளன. உரிய கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த புத்தகத்திற்கு பதிலாக புதிய புத்தகம் மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.