மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா, ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதன்படி, “வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக இருந்த கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக அகற்றப்பட்டுள்ளது.
பக்தர்கள் வானிலையை பார்த்து விட்டு வரவேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரவோ, உபயோகப்படுத்தவோ வேண்டாம். மேலும், சபரிமலையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 1,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள், பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.