சூரத்: குஜராத்தில் ஆம்ஆத்மி வேட்பாளரை பா.ஜ.,வினர் கடத்தி சென்றதாக டில்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் குற்றம் சாட்டிய நிலையில், அந்த வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் டிச.,5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக, 89 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கவுள்ளது.
பதிவான ஓட்டுகள், டிச., 8ல் எண்ணப்படுகின்றன. குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால், பா.ஜ., காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம்ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆம்ஆத்மி கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை பா.ஜ.,வினர் கடத்தி சென்றதாக ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், ‛கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. அவரின் வேட்புமனுவை நிராகரிக்க பா.ஜ.,வினர் முயற்சி செய்தனர். ஆனால் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்ட்டது. இதனால் வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் 2ம் நிலை தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‛நேற்று முதல் கஞ்சனையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை. வேட்புமனுவை பரிசீலனை செய்ய சென்றிருந்தார்.
வேட்புமனுவை பரிசீலனை செய்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மறுகணமே பா.ஜ.,வின் குண்டர்கள் அவரை கடத்திச் சென்றனர். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இது ஆபத்தானது. இது வேட்பாளரை மட்டுமல்ல ஜனநாயகத்தை கடத்துவது’ எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் பா.ஜ.,வினர் கடத்தி சென்றதாக கூறப்பட்ட கஞ்சன் ஜரிவாலா, நேற்று (நவ.,15) மாலை போலீஸ் பாதுகாப்புடன் சூரத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் சென்று வேட்புமனுவை வாபஸ் பெற்று சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மணீஷ் சிசோடியா கூறுகையில், ‛சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்து அவரை வாபஸ் பெற அழுத்தம் கொடுத்துள்ளனர். அதனால் அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
சீட்டுக்கு துட்டு
டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ.,வான அகிலேஷ் பதி திரிபாதியின் மைத்துனர் உட்பட 3 பேரை டில்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். தேர்தலில் சீட் வழங்குவதற்காக லஞ்சம் கேட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‛ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த கோபால் காரி மற்றும் அவரது மனைவிக்கு தேர்தலில் சீட் கொடுப்பதற்காக ரூ.90 லட்சம் கேட்டனர். இதனால் மூவரும் கைது செய்யப்பட்டனர்’ என்றனர்.
சீட்டுக்கு லஞ்சம் கேட்டதற்காக கட்சியினர் மூவர் கைது செய்யப்பட்டது குறித்து டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‛ஆம்ஆத்மி கட்சியில் தேர்தலுக்கு சீட் விற்பனை செய்யப்படுவதில்லை. யாரோ ஒருவர் சீட்டுக்கு பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் அவருக்கு சீட் விற்கப்படவில்லை. இது எங்கள் கட்சியில் பணத்திற்காக சீட் கொடுப்பதில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை தேவை’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்