சம்பா பயிர்க் கடன் வழங்குவதில் தாமதம்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கான பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு தேவையான நடைமுறை செலவுகளை சமாளிக்க, வங்கிகளில் பயிர் கடன் பெறுவதில் தாமதம் நிலவுவதாக இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். பயிர் கடன் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்காக விவசாயிகள், அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை தஞ்சாவூரில் நடத்த வேண்டும் எனவும் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள். இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

டெல்டா விவசாயிகள்

இதுகுறித்து பேசும் இச்சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், “இந்த ஆண்டுக்கான சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவினை அதிகப்படுத்துவதோடு நெல் கொள்முதலையும் அதிகப்படுத்திட தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. இந்நிலையில், பயிர் கடன் பெறத் தகுதியுள்ள உழவர்களுக்கு சிறிதும் தாமதமில்லாமல், அரசு நிர்ணயித்துள்ள கடன் தொகை முழுமையாக கிடைக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திட வேண்டிய பொறுப்பு கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு உள்ளது.

தமிழ்நாடு அரசு, சம்பா, தாளடி பயிர் கடன் கொள்கையினை தாமதமில்லாமல் அறிவித்து செயல்படுத்திட, காலம் தாழ்த்தாமல், நவம்பர் முதல் வாரத்தில் கூட்டுறவு மற்றும் வேளாண்மை துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், முன்னோடி வங்கிகளின் மேலாளர்கள், காவிரி சமவெளி மாவட்டங்களின் உழவர் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தினை தஞ்சாவூரில் நடத்திட வேண்டுமென சென்ற மாதம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

விமல்நாதன்

காரணம், கூட்டுறவு கடன் சங்கங்களில், தேசிய மயக்கமாக்கப்பட்ட அனைத்து வணிக வங்கிகளில் பயிர் கடன் பெறுகின்ற உழவர்கள், சம்பா தாளடி சிறப்பு பருவங்களுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்துவதற்கு நவம்பர் 15-ம் நாள் கடைசி நாளாகும். அதற்குள் உழவர்களுக்கு பயிர் கடன் கிடைக்கப்பெற செய்வதுதான் சரியாக இருக்க முடியும்! மேலும், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் பதிவாளர் சண்முகசுந்தரம் 12 -10- 2022 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழ்நாட்டில் பயிர் சாகுபடி செய்கின்ற உழவர்களின் சாகுபடி நிலம் அமைந்துள்ள பகுதியில் நிர்வாக எல்லையைப் பெற்றுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் மட்டுமே பயிர்கடன் பெறமுடியும்.

பிற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற வழிவகையில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், சம்பா தாளடி புதிய பயிர் கடன்பெற விரும்புகின்ற, தகுதியுள்ள உழவர்கள் தேவையில்லாமல், வீணாக அலைக்கழிக்கப்படுகின்றனர். தகுதியுள்ள உழவர்கள் புதிய பயிர்கடன் பெறமுடியாமல் தவிக்கின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நிகழாண்டு சம்பா தாளடிக்குத் தேவையான பயிர்கடன் பெற முடியாதோ! என விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இதனால், பயிர் காப்பீடு செய்யாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

விவசாயம்!

எனவே, இனியும் சிறிதுகூட தாமதிக்காமல், சம்பா தாளடி பயிர் சாகுபடி பயிர்கடன் வழங்குதல் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்திட உடனடியாக கூட்டுறவு, வேளாண்மை துறைகளின் அமைச்சர்கள், மாநில அளவிலான உயர் அலுவலர்கள், காவிரி சமவெளி மாவட்டங்களின் உழவர் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக்கூட்டத்தினை தஞ்சாவூரில் நடத்தி, பயிர் கடன்கள் வழங்குவதை எளிமைப்படுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். பயிர்கடன்களை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெறுகின்ற வசதிகளை ஏற்படுத்தினால் கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறுகின்ற கடன்மோசடி நிதி இழப்பு குற்றங்களை ஓரளவு குறைக்கலாம்’’ என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.