உலக கோப்பையை வெல்ல பிரேசில், பிரான்சுக்கு அதிக வாய்ப்பு – மெஸ்சி கணிப்பு

தோகா,

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் (இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) சந்திக்கின்றன.

இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 35 வயதான நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சிக்கு (அர்ஜென்டினா) இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம். அவரிடம் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மெஸ்சி கூறுகையில்,

‘இது பற்றி விவாதிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட அணிகள் குறித்து தான் நாம் பேசுகிறோம். மற்றவர்களை விட பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு சற்று வாய்ப்பு அதிகமிருப்பதாக நினைக்கிறேன். ஆனால் உலக கோப்பை கால்பந்தில் வாகை சூடுவது யார்? என்பதை கணிப்பது மிகவும் கடினம். சவால் நிறைந்த இந்த போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். போட்டியில் களம் இறங்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம்’ என்றார்.

‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் அர்ஜென்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் சவுதிஅரேபியாவை 22-ந்தேதி எதிர்கொள்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.