காந்திநகர்,
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், சூரத் (கிழக்கு) தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு இருந்த கஞ்சல் ஜரிவாலை பாஜக கடத்தி விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வேட்பு மனுவை திரும்பப் பெற கடந்த சில நாட்களாகவே ஜரிவாலுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் தற்போது அவர் மாயமாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக படுகொலை என்று விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சித்தலைவர்கள் தோல்வி பயத்தில் பாஜக வேட்பாளரை கடத்தி விட்டதாகவும் விமர்சித்துள்ளது. இதனிடையே மாயமானதாக கூறப்பட்ட வேட்பாளர் திரும்பி விட்டதாகவும் தேர்தலில் இருந்து போட்டியிடுவதில் இருந்து விலகி விட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது.