தனது வித்தியாசமான கதைக்களங்களால் புகழ்பெற்றவர் இயக்குநர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ரூத், ரோபோ சங்கர், பிரிகிடா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவானதாக சொல்லப்பட்டது. படம் வெளியானது முதலே பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளும், எதிர்மறை கருத்துகளும் குவியத் தொடங்கின. இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட சமர்ப்பிக்கப்படுவதற்காக தேர்விலிருந்த 13 படங்களின் பட்டியலில் ‘இரவின் நிழல்’ படமும் ஒன்றாக இருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து பேசிய பிரபல யூடியூப் திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன், ‘இரவின் நிழல்’ உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என விளம்பரப்படுத்தி பார்த்திபன் மக்களை ஏமாற்றுகிறார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பிஷ் அண்ட் கேட் (Fish and Cat) திரைப்படம்தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம். அந்த படத்தின் நீளம் 134 நிமிடங்கள் என பதிவிட்டு பார்த்திபனை வறுத்தெடுத்தார்.
இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பார்த்திபன், “ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்ட திரைப்படமானது நான் லீனியர் வரிசையில் இல்லை. குறைந்த பட்சம் ஒரு வருடமாக இத்திரைப்படத்தை உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என விளம்பரப்படுத்தி வரும் என்னிடம், அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லி மக்களை நான் ஏமாற்றுவதை தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். தேவைப்பட்டால் ஆதாரங்கள் வெளியிடப்படும்” என சீறினார்.
இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற ‘இரவின் நிழல்’ திரைப்படம், ஓரளவு ஆதரவைப் பெற்ற பின்னரும் பல மாதங்கள் ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது. இதனையடுத்து தாமத்துக்கு மன்னித்தருள வேண்டும் என மக்களிடத்தில் பார்த்திபன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
தனது திரைப்படம் குறித்த பேச்சு குறையத் தொடங்கியதை உணர்ந்த பார்த்திபன், தொட்டிலில் தூங்கும் குழந்தையை கிள்ளிவிட்டு தாலாட்டுவது போல ட்விட்டரில் ‘பொன்னியின் செல்வன்’ டீமை வம்பிழுத்தார். அதன்படி ட்விட்டரில், “அமேசானில் இன்று முதல் ‘பொன்னியின் செல்வன்’. எனவே, வரும் வாரம் வருமாம் ‘இரவின் நிழல்’-செய்தி. பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம்” என புலம்பியிருந்தார்.
மலைகளில் பிறந்து நதி சேரும் நீரின் தேடலாய், தன் திரைப்படம் எப்போது வெகுஜனத்தை சென்றடையும் என காத்திருந்த பார்த்திபனின் தலையில் பேரிடி ஒன்று தற்போது விழுந்துள்ளது. அதாவது ‘இரவின் நிழல்’ திரைப்படமானது பார்த்திபனுக்கு தெரியாமலேயே ப்ரைமில் வெளியாகியிருந்தது. அதில் இத்திரைப்படம் உலகின் 2-வது நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பேரதிர்ச்சியில் உறைந்த பார்த்திபன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனக்கு எதுவுமே அவ்வளவு சுலபமாக நடப்பதில்லை. அமேசானில் படம் வெளிவரும்போது எந்த ப்ரமோஷனும் இல்லை. திடீரென்று ஒரு நாள் வெளியாகியது. எந்த விளம்பரமும் இல்லை. மேலும் அதிலிருந்த கமெண்ட்ஸ் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அது மாறுவதற்கு 20 மணிநேரம் தேவைப்பட்டது. தற்போது இருக்கும் கமெண்ட்ஸூம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை மாற்ற முடியுமா என தெரியவில்லை.
பாலில் சொட்டு விஷம் போல, எதிர்மறையான விமர்சனங்கள் சீர்குலைத்து விடுகின்றன. அதை தவிர்க்க முடியாது. உலகம் முழுவதும் படம் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. விரைவில் இந்தப் படம் உலகம் முழுவதும் தெரியும். இது சிங்கிள் ஷாட்டா, நான் லீனியரா என்பதெல்லாம் இரண்டாவது தான். கன்டென்ட் உங்களை ஈர்க்க வேண்டும். இது சிங்கிள் ஷாட்; நான் லீனியர் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு.
பல நேரங்களில் இது யோக்கியமானது தான் என்பதை நிரூபிப்பது கொடுமையான விஷயம். எனக்கு இந்த சினிமாவைத்தவிர எதன் மேலும் ஈடுபாடில்லை. நான் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அடுத்து ஜனரஞ்சகமான ஒரு சினிமாவை குடும்பம், குடும்பமாக வந்து பார்க்கும் படத்தை எடுக்க இருக்கிறேன். ‘இரவின் நிழல்’ படத்தின் மேக்கிங் வீடியோ விரைவில் வெளியாகும். இது சிரமமான ஒரு மேக்கிங். குற்றம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்” என தன் உள்ளக் குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார்.
பார்த்திபனின் இந்த குற்றச்சாட்டு வீடியோவுக்கு அமேசான் பிரைம் நிறுவனம் இதுவரை எந்த ஒரு பதிலையும் சமூகவலைதளங்களில் அளித்ததாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கலைஞர்கள் காலம் முழுவதும் சிரமத்துக்குள்ளாகி வருவது தொடர்கதைதான். இந்நிலையில் முதல் நான் லீனியரா? அல்லது இரண்டாவது நான் லீனியரா? எனும் விவாதத்தை ஒருபுறம் ஒத்திவைத்து விட்டு பார்த்திபனின் முயற்சிகளுக்கு ஆதரவு தரவேண்டும் என நெட்டிசன்கள் குரல் எழுப்பிவருகின்றனர்.
பார்த்திபனின் பாணியிலேயே சொல்ல வேண்டுமானால், “ம்னுஞலைக, ம்யுலைக ழிடூநீ ழவா ம்டுண்வே!”.
குறிப்பு:
Fish and Cat திரைப்படத்தில் ஒலியை வைத்து நான்லீனியர் மாதிரியானதொரு விஷயத்தை முயன்று பார்த்திருப்பார்களே தவிர அது முழுமையான நான் லீனியர் திரைப்படம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
– ராஜேஷ் கண்ணன்