60ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஓசூரில் பிரமாண்ட ஐபோன் ஆலை! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 60ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஓசூரில் பிரமாண்ட ஐபோன் ஆலை அமைய இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்திருந்த நிலையில், அதை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்,  தமிழகத்தின் ஓசூர் அருகில் பிரம்மாண்ட ஆலை அமையவுள்ள தாகவும், இதன் மூலம் 60,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், இது தமிழகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையலாம் என கூறியிருந்தார். அதை தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்படுத்தி உள்ளார்.

தற்போது இந்தியாவில்  ஐபோன் உற்பத்தியானது விஸ்ட்ரான், பாக்ஸ்கான், பெகட்ரான் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிலையில் ஐபோன் பாகங்களை முதல் முறையாக இந்தியாவினை சேர்ந்த நிறுவனத்துடன் உற்பத்தி செய்யவுள்ளது. இது இந்திய நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மேம்பட்டுள்ளதோடு, இங்கு வேலை வாய்ப்பினையும் பெருக்கும் எனலாம். மொத்தத்தில் தமிழக இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கூறிய அஸ்வினி வைஷ்னவ், சீனாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் அங்கு ஐபோன் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க பற்றாக்குறையை தூண்டியுள்ளது. இதனால், ஐபோன் தேவைகளை நிவர்த்தி செய்ய ஓசூரில் தயாரிக்கப்பட உள்ளது.  பல்வேறு வெளி நாட்டு நிறுவனங்களும் இந்திய சந்தையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றன. இதனால் உற்பத்தியினை இங்கேயே தொடங்கியும் வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டின் ஓசூரில், ஐபோன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.  60 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் பணியாற்றும் வகையில் பிரமாண்டமாக தொழிற்சாலை அமைய உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர், ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை அமைக்க இருப்பதை உறுதி செய்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை தமிழகத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அமைய இருப்பதாகவும், இந்த தொழிற்சாலையில் 60 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் பணியாற்றும் வகையில் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் இந்த தொழிற்சாலைக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட்டால் ஏராளமான தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதும் தமிழகம் தொழில் துறையில் முன்னேற்றம் அடையும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.