இந்திய ரூபாயில் வர்த்தகம் முதல் நாடாக ரஷ்யா அங்கீகாரம்| Dinamalar

புதுடில்லி, :இந்தியாவுடனான வர்த்தகத்தை ரூபாயின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது. இதை செயல்படுத்துவதற்காக ரஷ்யாவைச் சேர்ந்த வங்கிகள், இங்குள்ள வங்கிகளில் சிறப்பு கணக்கை துவக்கியுள்ளன.

இது பற்றி மத்திய அரசின் வர்த்தக துறைச் செயலர் சுனில் பர்த்வால் கூறியுள்ளதாவது:

உலக நாடுகளுடனான வர்த்தகத்தை, நம் நாட்டின் ரூபாய் அடிப்படையில் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ரூபாயின் அடிப்படையில் பரிவர்த்தனை நடப்பதற்கு, நாடுகளுக்கு இடையே சமமான வர்த்தகம் இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையில், ரஷ்யாவுடன் மட்டுமே, நம்முடைய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சமநிலையில் உள்ளது. அதனால், ரூபாயின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு ரஷ்யா முதல் நாடாக முன்வந்துள்ளது.

ரூபாயின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்வது, நம் நாட்டின் நலனின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். மேலும், அமெரிக்க டாலர் மதிப்பை நாம் கவனிக்கத் தேவையில்லை.

ரூபாயின் அடிப்படையில் பரிவர்த்தனை நடப்பதற்கு சில விதிகள், கட்டுப்பாடுகள் உள்ளன. நம் ரூபாய் சர்வதேச கரன்சியாக இல்லை. இது தொடர்பாக, நிதி சேவை துறை, ரிசர்வ் வங்கி, ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுடன் பேசி வருகிறோம்.

இந்த பரிவர்த்தனை நடப்பதற்கு வசதியாக, ரஷ்யாவைச் சேர்ந்த ஏழு வங்கிகள், நம் நாட்டில் உள்ள வங்கிகளில், ‘வோஸ்ட்ரோ’ கணக்கை துவக்கியுள்ளன.

அதாவது நம் நாட்டு வங்கியில் உள்ள ரஷ்ய வங்கியின் கணக்கில் நாம் ரூபாயாக செலுத்தினால் போதும். இது ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

தற்போதைய நிலையில், ரஷ்யாவின் காஸ்பிரோம் வங்கி, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் யூகோ வங்கியில் கணக்கு துவக்கியுள்ளது. மற்ற ஆறு ரஷ்ய வங்கிகள், தனியார் வங்கியான இண்டஸ்இண்ட் வங்கியில் கணக்கு துவக்கியுள்ளன.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, இங்குள்ள வர்த்தகர்கள் இந்த வங்கிக் கணக்கில் முதலில் பணத்தை செலுத்த வேண்டும். இறக்குமதி செய்த பின், ரஷ்ய நிறுவனம் அதற்கான தொகையை ரூபாயாக பெற்றுக் கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.