விமான பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயமல்ல – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 501 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,561 ஆக குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோரில் 0.02 சதவீதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் 98.79% ஆக உள்ளது. 1.19% பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் கரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. இதன்படி விமானப் பயணத்தின்போது பயணிகள் இனி கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, முகக்கவசம் அணிய வில்லை எனக்கூறி பயணிகளுக்கு அபராதம் விதிக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ கூடாது. அதேநேரம், கரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பயணிகள் தாமாக முன்வந்து முகக்கவசம் அணியலாம் என அறிவிப்பு கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.