அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின்போது, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
newstm.in