முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரிய விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றத்தின் தகவல் பெறும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆணையம் ஒத்திவைத்தது.
சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் ஜெயலலிதாவின் பொருட்களில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள் நீண்ட நாட்களாக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அவை நிறம் மங்கி கிழிந்துவிடும். அதனால் அவற்றை மட்டும் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்குமாறு அவர் கோரிக்கை வைத்திருந்தார். அவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் உரிய பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் தகவல் பெறும் உரிமை மேல்முறையீட்டு அமைப்பில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தகவல் பெறும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக இருப்பதால் அது பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் அவற்றை ஏலம் விட்டு அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM