மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம்

யிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், வரதராஜபுரத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள நளங்குடியில் ஏழு அண்ணன் மார்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள் கன்னியம்மன். அழகான தோற்றம் கொண்ட இவரை, திருமணம் செய்ய ஆங்கிலேய ஆட்சியாளர் ஒருவர் விரும்பியுள்ளார். இதற்கு ஏழு அண்ணன் மார்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணம் செய்துதர மறுத்தால் ஆங்கிலேயர்களின் கொடுங்கோலான ஆட்சியாளர்கள் விதிக்கும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் உணர்ந்தனர். இதனால் ஏழு அண்ணன் மார்களும் ஆலோசித்து, நளங்குடியில் எழுந்தருளியுள்ள தங்கள் குல தெய்வமான மயிலேறும் பெருமான் சாஸ்தா கோயில் சன்னதி அருகில் பெரிய அளவிலான குழி தோண்டி உயிருடன் தங்கை கன்னியம்மனைப் பூமியில் இறக்கினர். இறக்கப்பட்ட இடத்தில் தங்கையின் ஞாபகார்த்தமாக பாதாள கன்னி அம்மன் என்ற பெயரில் கோயில் கட்டி வழிபாடும் நடத்தினர். தற்போதும் மயிலேறும் பெருமான் சாஸ்தா சன்னதி அருகில் உள்ள பாதாள கன்னியம்மனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது.

மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். சுவாமிக்கு எதிராக மயில், யானை, குதிரை, நாய் வாகனங்களும், முருகன் வேடத்தில் சாஸ்தா அமர்ந்திருப்பதால் சைவமாக சுடலையும் எழுந்தருளியுள்ளார். சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்திருப்பதன் ரகசியம் தெரியவரவில்லை.

கோயில் பெருமான் புகழ் குறித்த பாடல்: “மயிலேறும் பெருமான் மக்களைக் காப்பாய் குயில் கூவு பனை சூழ் நளமாக குடியில் வரதராச புரக்கிராமம் வரமருள் பரமா! திருவை குண்டம் பாசானம், வடகால் வடபுறம் வீற்ற வரதா! திடமான நெஞ்சு திகழ வைப்பாய்!
நளங்குடி குணபால் நாதா! அமர்ந்தாய் வளவயல் கதிர்கள் ஆலவட்டம் செய்யும்மே” என்ற பாடலை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் உச்சரிக்கின்றனர்.

நெடுநாட்களாகத் திருமணம் தடைப்படுபவர்கள் சுவாமிக்கும், பாதாள கன்னியம்மனுக்கும் விஷேச அலங்கார பூஜை நடத்தி பக்தர்களுக்கு பழம் வழங்கி பிரார்த்தனையை நிறைவு செய்கின்றனர். பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல், குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்றவற்றிலும் பக்தர்கள் ஈடுபடுகின்றனர். மனதில் நினைத்த நல்ல காரியங்கள் நடக்க மயிலேறும் பெருமான் சாஸ்தாவை வணங்கினால் நடப்பதாக இப்பகுதியில் நம்பிக்கையுள்ளது. பாதாள கன்னியம்மனுக்கு பங்குனி உத்திரத்தன்று தாமிரபரணி ஆற்றின் கிளை கால்வாயில் இருந்து கும்பம் எடுத்து வந்து பூஜைகளும் சிறப்பு தீபாரதனைகளும் நடப்பது வழக்கம்.

விநாயகர், நாகராஜா, வீரபுத்திரர், பிணமாலை சூடும் பெருமான், நல்லமாடசுவாமி சிலைகளும் தனித்தனியே காணப்படுகிறது. சேனைத்தலைவர் சமுதாயத்தினர் கோயிலை நிர்வகித்து வருகின்றனர்.

திருமணதடை நீங்க இங்குள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தாவை வழிபடுகின்றனர்.

பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல், குழந்தைகளுக்கு காதுகுத்துதல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.