காரைக்கால் நகரப் பகுதியில் செயின்ட் ஜோசப் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள வாகை மரத்தில் கதண்டுகள் இருப்பதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவர்களை கடித்து விட்டதாகவும் தீயணைப்பு துறைக்கு புகார் வந்தது.
புகாரை ஏற்று நிலை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் வந்து கதண்டு கூடு உள்ளதா என ஆய்வு செய்தனர். கூடு இல்லாமல் மரத்திலேயே கதண்டுகள் தங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் ஸ்போம் என்று சொல்லக்கூடிய ஒரு வகை ரசாயனத்தை கொண்டு நுரையை பீய்ச்சு அடித்து கதண்டுகளை விரட்ட திட்டமிட்டு மரத்தின் முழு பகுதியும் நுரையால் நனையுமாறு பீய்ச்சி அடித்து கதண்டுகளை விரட்டினர். ரசாயனத்தின் வாசனைக்கு கதண்டுகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் எதுவும் மரத்தில் தங்காது என்பதால் இந்த முறையை பயன்படுத்தியதாக தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தெரிவித்தார்.
மாவட்டத்தில் கதண்டுகள் தொல்லை என பல்வேறு பிரச்னைகளால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறும் பெற்றோர், பள்ளி கல்வித்துறை கட்டடங்கள் மற்றும் சூழல்களை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in